திருமழபாடி, காவிரி வடகரை பாடல் பெற்ற சிவதலங்கள் வரிசையில், 54வது தலமாக விளங்குகிறது. இத்தலத்தில்தான், நந்திதேவருக்குத் திருமணம் நடைபெற்றது. மகப்பேறின்மையினால் வருத்தமுற்ற சிலாதமுனிவர் ஐயாறப்பனைப் பூஜித்து தவம் செய்தார்.
மகிழ்ந்த ஐயாறப்பர், "சிலாதனே! நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும் என்று சொல்ல. யாகம் செய்வதற்காக யாக பூமியை உழும்பொழுது ஒரு பெட்டகம் தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் 16 வயதுதான். அவனை எடுத்துக்கொள்" என்று அருளினார்.
அவ்வாறே சிலாத முனிவரும் யாக முடிவில் பூமியை உழும்போது ஒரு பெட்டகம் அகப்பட அதனை திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினர். ஐயாறப்பர் அசரீரி வழியே 'பெட்டியை மூடித்திற' என்று கட்டளையிட்டார்.
அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. பெற்றோர்கள் அக்குழந்தைக்குச் 'செபேஸ்வரர்' என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். செபேஸ்வரர் 14 வயதுக்குள் வேதாகம சாஸ்திரங்களாகிய சகல கலைகளிலும் வல்லவரானார். அறிவின் மிக்க இம்மைந்தனை இன்னும் இரண்டு ஆண்டில் இழக்க நேருமே என்று ஏங்கிய தாய் தந்தையர்களைக் கண்ட செபேஸ்வரர், ஐயாறப்பன் கோயிலை அடைந்து இறைவனை பூஜித்து அயனரி தீர்த்தத்தில் நீராடி காலின்மேல் காலை ஊன்றிக் கடுந்தவம் செய்தார். செபேஸ்வரரின் உறுதியான அன்பையும், வைராக்கியத்தையும் கண்டு மகிழ்ந்த இறைவன் காட்சி கொடுத்து, வேண்டும் வரங்களையும், 16 பேறுகளையும் கொடுத்தருளினார். நந்தி திருமணம் திருமழபாடி, ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனுக்கு காவலாகவும், உற்ற தோழனாகவும் விளங்கி வரும் நந்தி தேவருக்கும் சுயசாம்பிகை தேவியாருக்கும் (சுயம்பிரகாசை யம்மை) நிச்சயிக்கப்பட்டு இத்தெய்வீகத் திருமணம் சிறப்பாக நடைபெறும்.